திருப்பூர் மாநகராட்சியின் 3-வது மேயராக திமுகவை சேர்ந்த ந.தினேஷ் குமார், துணை மேயராக இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இன்று (மார்ச் 4) தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருப்பூர்மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 வார்டு உறுப்பினர்களும் நேற்று முன்தினம் பதவியேற்றனர். மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில், மேயர் வேட்பாளராக 49-வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த ந.தினேஷ்குமாரை (42) தலைமை அறிவித்துள்ளது. அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மறைமுகத் தேர்தலுக்கு பிறகு மேயராக பதவியேற்க உள்ளார்.
2005-ம் ஆண்டு தேமுதிகவில் இணைந்த அவர், கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். அதன்பின், திருப்பூர் மாவட்ட தேமுதிக செயலாளராக இருந்தார். அக்கட்சியில் 2 முறை எம்.பி. பதவிக்கும், ஒருமுறை மேயர் பதவிக்கும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016-ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் திமுகவில் இணைந்து தொடர்ந்து களப்பணி ஆற்றி வந்தார.
2020-ல் திருப்பூர் வடக்குமாநகர திமுக பொறுப்பாளராகநியமிக்கப்பட்டார். தொடர்ந்து களப் பணியாற்றியது, அனைவரிடமும் எளிமையாக பழகும் தன்மை மற்றும் கடின உழைப்பினால் தற்போது மேயராக ந.தினேஷ்குமார் பதவியேற்க உள்ளதாகவும், மேயர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், இளைஞர் ஒருவரை கட்சித் தலைமை விரும்புவதாலும் அவரை தலைமை அறிவித்துள்ளது என்கின்றனர் திமுகவினர்.
துணை மேயர்
துணை மேயர் பதவி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் எம்.கே.எம்.ஆர்.பாலசுப்பிரமணியம் (66) வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். 1975-ம் ஆண்டு முதல்கட்சியின் உறுப்பினராகவும், தற்போது திருப்பூர் மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார். பனியன் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள அவர், உள்நாட்டு பனியன் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 37-வது வார்டு பகுதியில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்துள்ளார்.