தமிழகம்

எதிர்பார்ப்புகளை மிஞ்சிய கோவை மேயர் வேட்பாளர் தேர்வு: கட்சியினருக்கே ஆச்சரியம் அளித்த திமுக

பெ.ஸ்ரீனிவாசன்

கோவை மாநகராட்சியின் 6-வது மேயராகவும், முதல் பெண் மேயராகவும் திமுகவைச் சேர்ந்த ஏ.கல்பனா பதவியேற்கவுள்ளார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு அவரை தேர்வு செய்தது, அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கடந்த 1981-ம் ஆண்டில் 72 வார்டுகளுடன் கோவை நகரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2010-ம்ஆண்டில் 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 1996-ம் ஆண்டு முதல் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை கோவை மேயர் பதவிகளை அதிமுக 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் கைப்பற்றியுள்ளன. கோவை மாநகராட்சியில் இதுவரை வெற்றி பெற்றபோதெல்லாம் மேயர் பதவியை கூட்டணிக் கட்சிக்கே திமுக வழங்கியுள்ளது.

இம்முறை கோவை மாநகராட்சியின் மேயர் பதவிக்காக திமுக நேரடியாக களம் கண்டது. மொத்த வார்டுகளில் 73 வார்டுகளைத் திமுகதனியாகவும், கூட்டணியாக 96 வார்டுகளையும் கைப்பற்றி அசத்தியது. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையடுத்து மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஒரு பெண்ணே மேயராக பதவியில் அமரப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் யார் அவர் என்பதே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோவை மாவட்ட திமுகவில் நிலவி வந்த பரபரப்பு.

கோவையின் முன்னாள் துணை மேயரும் திமுக மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலைசேனாதிபதியின் மகள் நிவேதாமற்றும் மீனா லோகு ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

இறுதிகட்டத்தில் இலக்குமி இளஞ்செல்வி மற்றும் நிவேதா இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்றே கவுன்சிலர்கள் பதவியேற்பு தினத்தில் கூட உள்ளூர்திமுக நிர்வாகிகள் பேசிக்கொண்டனர். ஆனால் கட்சியினரே எதிர்பாராத வகையில், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு பெரிய பொருளாதார பின்புலம்இல்லாத, 19-வது வார்டு கவுன்சிலர் ஏ.கல்பனா மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் தேர்வில் கோவைக்குகட்சி சார்பில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் ஏ.செந்தில் பாலாஜியின் பங்கு முக்கியமானதாக உள்ளது என்றும், கோவையில் எதிர்கால திமுகவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே, இவ்வாறு எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு பெண் கட்சி தலைமையால் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அரசியல்பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் சொந்தமாகஇ-சேவை மையம் நடத்தி வருகிறார். நகை விற்பனை நிறுவனத்தின் வைர நகைகள் உற்பத்தி தொழிற்சாலையில் கல்பனா வேலை செய்து வருகிறார். கணவர், அவரது தந்தை பழனிசாமி என அனைவரும் திமுக பாரம்பரியம் கொண்டவர்கள். கல்பனாவும் கடந்த 14 ஆண்டுகளாக கட்சியில் உள்ள நிலையில், தற்போது மேயராக தேர்வாகிறார்.

SCROLL FOR NEXT