தமிழகம்

கோபி நகராட்சித் தலைவர் பதவி: திமுக கூட்டணி குழப்பத்தில் மீன் பிடிக்குமா அதிமுக?

செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் கோபி நகராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவும் வேட்பாளரைக் களமிறக்க முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில், 14 வார்டுகளில் திமுகவும், இரண்டு வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக 13 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். கூட்டணி அடிப்படையில் பார்த்தால் திமுக - காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பெரும்பான்மை பெற்று நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற முடியும்.

இந்நிலையில், 13 கவுன்சிலர்களை வைத்துள்ள அதிமுக நகராட்சித்தலைவர் பதவிக்கு கோபி நகர அதிமுக செயலாளராக உள்ள பிரினியோ கணேஷை வேட்பாளராக நிறுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. சுயேச்சை வேட்பாளர் ஆதரவு அதிமுகவுக்கு கிடைத்தாலும், 14 என்ற எண்ணிக்கையை மட்டும் தொட முடியும் என்ற நிலையில், அதிமுகவும் களத்தில் இறங்கவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸில் குழப்பம்

இதனிடையே கோபி நகராட்சித்தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், நேற்று இரவு வரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. கோபி நகராட்சியில் காங்கிரஸ் சார்பில் வேலுமணி, தீபா என்ற இரு பெண் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து கோபி நகராட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் நிர்வாகியுமான நல்லசாமியிடம் கேட்டபோது, ‘கோபி நகராட்சியில் துணைத்தலைவர் பதவியைத்தான் காங்கிரஸ் கட்சி கோரியிருந்தது. தவறுதலாக தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மாற்று அறிவிப்பு விரைவில் வரும்’ என்றார்.

தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி மறுக்கும் பட்சத்தில், திமுக நகரசெயலாளரும், கவுன்சிலருமான என்.ஆர். நாகராஜ் வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. அவருக்கு எதிரணியில் உள்ள திமுக கவுன்சிலர்கள் மனம் மாறி, அதிமுகவிற்கு வாக்களித்தால், கோபி நகராட்சி அதிமுக வசமாகும் வாய்ப்புள்ளது.

கோபி சட்டப்பேரவைத்தொகுதி எம்.எல்.ஏ.வாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ள நிலையில், கோபி ஊராட்சி ஒன்றியம் அதிமுக வசமே உள்ளது. இங்குள்ள 6 பேரூராட்சிகளில் லக்கம்பட்டியில் மட்டும் அதிமுக பெரும்பான்மை பெற்றுள்ளது. மீதமுள்ள 5 பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கூட்டணியே பெறவுள்ளது.

SCROLL FOR NEXT