தமிழகம்

திமுகவினரின் மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி எம்பி உறுதி

செய்திப்பிரிவு

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தனது தேர்தல் பிரச்சாரத்தை சேலத்தில் நேற்று தொடங்கினார். முன்னதாக நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் வெயிலின் கொடுமை தாங்காமல்தான் 2 பெண்கள் இறந்துவிட்டனர் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்களின் உயிரிழப்புக்குப் பின்புதான், இது கோடை காலம் என்பதும், வெயில் அதிகமாக உள்ளது என்பதும் ஒரு முதலமைச்சருக்கு தெரிந்துள்ளது என்றால், அவர் ஆட்சி செய்யும் தமிழக நிலையும், மக்களின் நிலையும் எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஜெயலலிதா பொதுக்கூட்ட மேடை அமைப்பு, ஹெலிகாப்டர் செலவு, கூட்டத்துக்கு வருபவர் களுக்கு வழங்கப்படும் தொப்பி உள்ளிட்ட அனைத்துச் செலவு களும் யாருடைய கணக்கு எனத் தெரியவில்லை. திமுகவினரே மது ஆலைகளை நடத்துவதாக அரசியலுக்காக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்த உடன் திமுகவினரோ, திமுகவினரின் உறவினர்களோ மது ஆலைகளை நடத்தி வந்தால், அவை அனைத்தும் உடனே மூடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சேலத்தில் பிரச்சாரம்

சேலம் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் கனிமொழி பேசியதாவது:

‘விஷன் 2023’ என்ற தொலைநோக்கு திட்டம் மூலம் ரூ.15 லட்சம் கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதாக முதல்வர் கூறினார். ஆனால், ஒரு பணியாவது நடந்ததா? சேலத்துக்கு ரிங்ரோடு, மேம்பாலம் திட்டம் கொண்டு வருவதாக கூறினார். இதை ஏதாவது செய்துள்ளாரா?

சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 210 நாட்கள் கடந்து விட்டன. ஆனால், ஒரு ஆலையாவது செயல்பாட்டுக்கு வந்ததா? விதி 110-ன் கீழ் 210 திட்டங்களை அறிவித்தார். ஒரு திட்டமாவது நிறைவேறியதா? அதிமுக ஆட்சியில் 6,800 மதுக்கடைகள் திறந்ததுதான் சாதனை. 70 லட்சம் பேரை தமிழகத்தில் குடிகாரராக மாற்றி, 3 கோடி குடும்பங்களை வேதனை கண்ணீர் வடிக்க வைத்தவர்தான் ஜெயலலிதா.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT