துணை மேயர் வேட்பாளராக மேரிபிரின்ஸ் 
தமிழகம்

நாகர்கோவில் துணை மேயர் பதவி திமுகவுக்கு அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் அதிருப்தி

செய்திப்பிரிவு

திமுக சார்பில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட் பாளராக மகேஷ், துணை மேயர் வேட்பாளராக மேரிபிரின்ஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 979 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், கொல்லங்கோடு, குழித்துறை, பத்மநாபபுரம் ஆகிய 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.

நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில், திமுக, காங்கிரஸ் கூட்டணி 32, பாஜக 11, அதிமுக 7, சுயேச்சைகள் இரு இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், அதிமுகவுடன் இணைந்து மேயர் பதவியைக் கைப்பற்ற பாஜகவும் முயற்சித்து வருகிறது. இதனால் திமுக கூட்டணியில் உள்ள கவுன்சிலர்களைத் தக்கவைக்க அக்கட்சியினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

நகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ் பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக மேயர் வேட்பாளராக மாநகராட்சியின் 4-வது வார்டு திமுக உறுப்பினர் மகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை மேயர் வேட்பாளராக திமுக உறுப்பினர் மேரி பிரின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்கள் இருப்பதால், துணை மேயர் பதவி தங்களுக்கு ஒதுக்கப்படும் என காங்கிரஸார் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், திமுகவுக்கே துணை மேயர் பதவியும் அறிவிக்கப்பட்டிருப்பது குமரி காங்கிரஸார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது.

இதைப்போல் 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கும் இன்று தலைவர், துணைத் தலைவர் தேர்வு நடைபெறவுள்ளதால் குமரி மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT