மதுரை: முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனுக்கும், அவரது மகனான நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் விசுவாசமாக இருந்ததால் அவரது குடும்பத்தின் பரிந்துரையால், இந்திராணி பொன்வசந்த் மதுரை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் திமுக 67 வார்டுகளையும், காங்கிரஸ் 5 வார்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளையும், மதிமுக 3 வார்டுகளையும், விடுதலை சிறுத்தைகள் ஒரு வார்டையும் கைப்பற்றினர். அதிமுக 15 வார்டுகளையும், பாஜக ஒரு வார்டையும், சுயேச்சைகள் 4 வார்டுகளையும் கைப்பற்றியது. திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் மேயராகுவது உறுதியானது. மேயர் வேட்பாளர் ‘சீட்’ பெற முக்கிய கவுன்சிலர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி மேலிடத் தலைவர்கள் சிபாரிசு மூலம் பெரும் முயற்சி செய்தனர்.
இதில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோர் இணைந்து 57-வது வார்டு கவுன்சிலர் இந்திராணிக்கும், முன்னாள் அமைச்சரும், மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான பொன்.முத்துராமலிங்கம் தனது மருமகளும் 32-வது வார்டு கவுன்சிலருமான விஜயமவுசுமிக்கும், அமைச்சர் பி.மூர்த்தி, புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன் ஆகியோர் 5-வது வார்டு கவுன்சிலர் வாசுகிக்கும் கட்சித் தலைமைக்கு சிபாரிசு செய்தனர். திடீரென்று கடைசி நேரத்தில் 4-வது பெயராக 79-வது வார்டு கவுன்சிலர் லக்ஷிகா ஸ்ரீ பெயரும் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால், கடைசி நேரத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை இல்லாமலே ஸ்டாலின் நேரடியாக லக்ஷிகா ஸ்ரீயை மேயர் வேட்பாளராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டதால் மதுரை மாவட்ட திமுகவில் பரபரப்பு தொற்றுக் கொண்டது.
இந்நிலையில், இன்று மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் பட்டியலை திமுக கட்சித் தலைமை அறிவித்தது. இதில், மாநகராட்சி 57-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி மதுரை மேயர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர், நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனால் சிபாரிசு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட இந்திராணி பொன்வசந்த், கணவர் பொன்வசந்த் வழக்கறிஞராக உள்ளார். ஆரப்பாளையம் பகுதி கழக செயலாளராக உள்ளார். இவர், மாவட்ட மாணவர் துணை அமைப்பாளராகவும், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். முன்னாள் சபாநாயகர் பிடிஆர்.பழனிவேல் ராஜன், அவரை தொடர்ந்து அவரது மகன் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் போட்டியிட்ட தொகுதிகளில் தேர்தல் பணியாற்றி அவர்களின் குடும்பத்திற்கு நம்பிக்கைக்குரியவராக இருந்துள்ளார்.
பொதுவாக பழனிவேல் தியாகராஜன், கட்சிப்பதவிகளுக்கு யாரையும் சிபாரிசு செய்ய மாட்டார். மாநகர கட்சி விவகாரங்களிலும் தலையிட மாட்டார். பகுதி கழக செயலாளர், மாவட்ட செயலாளரிடம் கேட்டே கட்சிப்பணிகளில் ஈடுபடுவார். ஆனால், தனது தந்தைக்கும், தனக்கும் விசுவாசியாக இருந்ததோடு தனது மத்திய தொகுதிக்குட்பட்ட கவுன்சிலராகவும் இருந்ததால் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாராஜன் மேயர் வேட்பாளருக்கு தனது ஆதரவாளர் பொன்வசந்த் மனைவி இந்திராணியை கட்சித் தலைமைக்கு சிபாரிசு செய்து அவரை மேயர் வேட்பாளராக்க ஸ்டாலின் மருமகன் சபரிசீசன் மூலமாக பெரும் முயற்சி செய்து வந்தார் என்று திமுக வட்டாரம் தெரிவித்தது.
பழனிவேல் தியாகராஜன், கடந்த அதிமுக ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்தபோதே மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளையும், அதன் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து விமர்சனம் செய்து வந்தார். கடைசியாக மதுரை மாநகராட்சியின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சனம் செய்தார். அதனால்தான் அவர், தான் சிபாரிசு செய்த கவுன்சிலர் மேயராக வந்தால் மாநகராட்சி நிர்வாக பணிகளில் நிதியமைச்சர் என்ற முறையில் தலையிடவும், மாநகராட்சி முன்னேற்றங்களுக்கு ஆலோசனைகளை தெரிவிக்க வசதியாகவும் இருக்கும் என்று எண்ணினார். அதனாலே, பழனிவேல் தியாகராஜன் சிபாரிசுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கட்சித் தலைமை இந்திராணியை மேயர் வேட்பாளராக்கியுள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.
வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் மூலம் சிபாரிசு செய்த கவுன்சிலர் வாசுகி, புறநகர் மாவட்டத்தை சேர்ந்த விரிவாக்கப்பட்ட வார்டு என்பதால் அவருக்கு மேயர் வேட்பாளர் போட்டியில் பின்னடைவு ஏற்பட்டது. அரசியலில் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் பெற்ற பொன்முத்துராமலிங்கம், தனது மருமகள் விஜயமவுசுமிக்கு மேயர் வேட்பாளராக்க தனது அனைத்து அரசியல் முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாராஜன் இருவரும், விஜயமவுசுமி மேயரானால் பொன்முத்து ராமலிங்கத்தை மீறி மாநகராட்சி விவகாரங்களில் தங்கள் எந்த தலையீடும் செய்ய முடியாது என்பதால் அவர் மேயர் வேட்பாளராக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இரு அமைச்சர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் மேயர் ரேஸில் முன்னனியில் இருந்த விஜயமவுசுமி மேயர் வேட்பாளராக முடியவில்லை என்று கட்சியினர் தெரிவித்தனர்.
குடும்பத்தலைவி டூ மேயர் வேட்பாளர்
திமுகு மேயர் வேட்பாளர் இந்திராணி தேனி பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்துள்ளார். காமராஜ் பல்கலைக்கழகத்தில் எம்ஏ படித்துள்ளார். இவரது மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்திராணி அரசியலில் ஈடுபடாமல் சாதாரண குடும்பத் தலைவியாகதான் இருந்து வந்தார். தற்போது முதல் முறையாக கவுன்சிலராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார்.
57-வது வார்டில் போட்டியிட்டு 6 ஆயிரத்து 851 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். இவரை எதிர்த்து தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் வெறும் 958 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார். சுமார் 5 ஆயிரத்து 893 வாக்குள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார். இந்த வெற்றியும் இவர் மேயர் வேட்பாளராகுவதற்கு உதவி செய்துள்ளாக கூறப்படுகிறது.
திமுகவுக்கு மாநகராட்சியில் தனிப்பெரும்பான்மை கிடைத்துவிட்டதால் இந்திராணி மேயராகுவது உறுதியாகியுள்ளது. ஆனால், அவருக்கு தனிப்பட்ட முறையில் அரசியல் அனுபவம் இல்லாததால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கணவர் பொன்வசந்த் ஆலோசனைபேரிலே சில ஆண்டுகள் மேயராக செயல்பட வாய்ப்புள்ளது. அதன்பிறகு கிடைக்கும் அனுபவத்தை கொண்டு அவர் தனித்துவமாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.