கரூர்: பாஜகவின் வெற்றியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே 65 சதவீதம் என்ற நிலையில், அக்கட்சி தங்களை 3-வது பெரியக் கட்சி எனக் கூறிக் கொள்வதாக நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டில் பாசிச சக்திகள் வெற்றிப்பெற்று சூறையாட புறப்பட்டுள்ளன என கரூரில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் 80 அடி சாலையில் முதல்வர் ஸ்டாலினின் 69-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத் பேசியது: "தமிழகத்தில் உள்ள 12,480 நகர்ப்புற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 4,830 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியது பாஜக. அவர்கள் பெற்ற வெற்றியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே 65 சதவீதத்தை பெற்றுவிட்ட தங்களை 3-வது பெரியக் கட்சி எனக் கூறிக் கொள்கிறது.
முன்னாள் முதல்வர் பழனிசாமி, அதிமுகவை அடகு வைத்துவிட்டு வெற்று அரசியல் செய்து வருகிறார். அதிமுக அஸ்தமனத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் தமிழக முதல்வராக இருக்கும் வரை வேறு ஒருவர் தமிழகத்தில் முதல்வர் பதவியில் உட்கார முடியாது.
2024-ம் ஆண்டில் பாசிச சக்திகள் வெற்றி பெற்று சூறையாட புறப்பட்டுள்ளன. பாசிசம் வெல்லாது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரஷ்யா போரை நிறுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் அரவக்குறிச்சி ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி, கரூர் மாநகரப் பொறுப்பாளர்கள் மத்தி எஸ்.பி.கனகராஜ், வடக்கு கணேசன், தெற்கு வழக்கறிஞர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் மணிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.