கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை பகுதியில் இன்று காலையில் ஏற்பட்ட நில அதிர்வால் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது, நில அதிர்வு தொடர்பாக தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் இன்று காலை 9 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சில நிமிடங்கள் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆசிரியர்கள் மாணவர்களை உடனடியாக வகுப்பறைகளிலிருந்து வெளியேற்றியுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர் வாசுதேவன் உடனடியாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூடலூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஸ்ரீமதுரை பள்ளியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தீயணைப்புத்துறையினர் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியை தனிமைப்படுத்தி, அப்பகுதி நடமாட தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பை வைத்தனர். நில அதிர்வு தொடர்பாக ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் கூறியதாவ: "ஸ்ரீமதுரையில் நில அதிர்வு 5 ஐந்து நிமிடம் உணரப்பட்டது. பள்ளியில் இருந்த குழந்தைகளை பாதுகாப்பு கருதி, தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.
ஸ்ரீமதுரையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் அப்குதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.