தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், விடுதி பணியாளர்கள் மற்றும் சிகிச்சை அளித்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதயமேரி பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். பள்ளி விடுதி அறையை சுத்தம் செய்யச் சொல்லி வார்டன் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், திருக்காட்டுபள்ளி போலீஸார், விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனிடையே, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி சிகிச்சையில் இருந்தபோது, மதம் மாற பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதாக மாணவி பேசிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என அவரது தந்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இவ்வழக்கை சிபிஐக்குமாற்ற கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இவ்வழக்கைசிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மாணவியை தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட 4 சட்டப் பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன் பின்பு, சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினர், கடந்த பிப். 21-ம் தேதி, மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளியில் ஆசிரியர்கள், பள்ளி மற்றும் விடுதி நிர்வாகிகள், வார்டன், மாணவர்கள் என பலரிடமும் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, மைக்கேல்பட்டியில் உள்ள விடுதியில் நேற்று முன்தினமும், நேற்று காலை 10.30 மணியில் இருந்து மாலை வரை சுமார் 7 மணி நேரமும் சிபிஐ இன்ஸ்பெக்டர்கள் சுமதி, ராஜசேகர் அடங்கிய குழுவினர் விடுதி பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், விடுதியில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.
சிபிஐ டிஎஸ்பி சந்தோஷ் தலைமையிலான 5 பேர் கொண்ட மற்றொரு குழுவினர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஐசியூ வார்டில் பணியில் இருந்த செவிலியர்கள் ஆகியோரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சிபிஐ அதிகாரிகள் குழுவினர் நாளை (மார்ச் 4) வரை தஞ்சாவூரில் தங்கியிருந்து பள்ளி மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.