உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவில் இருந்து அங்கு சென்று பயிலும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். மத்திய அரசின் முயற்சியால் அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, உக்ரைனில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு தமிழகத்தை சேர்ந்தவர்களோடு புதுச்சேரியை சேர்ந்த மாணவி ரோஜா சிவமணி நாடு திரும்பினார். அவரை சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, ‘‘புதுச்சேரியைச் சேர்ந்த ரோஜா சிவமணி, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களோடு திரும்பி வந்துள்ளார். மத்திய அரசின் கடுமையான முயற்சியால் இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு வருகின்றனர்.
மாணவி ரோஜா சிவமணி உக்ரைனில் 6-ம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார். இன்னும் இரு மாதங்களில் தன் படிப்பை நிறைவு செய்திருப்பார். அதற்குள் போர் வந்துவிட்டது. அவர் பத்திரமாக மீட்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது. புதுச்சேரியில் இருந்து சென்ற 23 மாணவர்களும் பத்திரமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது.
வெளியுறவுத்துறையிடம் தொடர்பு கொண்டு மாணவர் களை மீட்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ள பிரதமருக்கு நன்றி. இந்தியர்களை மீட்க 26 விமானங்களுக்கு மேல் இயக்கப்பட்டுள்ளது. 4 மத்திய அமைச்சர்களை உக்ரைன் எல்லை நாடுகளுக்கு அனுப்பி, இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை யில் பிரதமர் ஈடுபடுத்தியுள்ளார்.
‘ஆபரேஷன் கங்கா’ என்றதிட்டம் மிகச் சிறப்பாக, மனிதாபிமானத்தோடு இந்தியர்கள் யாரும்விடுபட்டுவிடக்கூடாது என்ற நிலையில் இயங்கி கொண்டிருக்கிறது. இது மனநிம்மதியை தருகிறது.உக்ரைனில் போர் சூழல் கவலை அளிக்கிறது. அனைத்துமாணவர்களும் வந்து சேர்ந்தால்தான் மிகவும் ஆறுதலாக இருக்கும். மத்திய அரசோடு இணைந்து, மாநில அரசும் மாணவர்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.