தமிழகம்

புதுவையில் இருந்து பெங்களூருக்கு 27-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை

செய்திப்பிரிவு

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து, கடந்த 2013-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் பெங்களூருக்கு விமான சேவையை தொடங்கின. ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத தால் இச்சேவைகள் நிறுத்தப் பட்டன.

இதற்கிடையே, நாடு முழுவதும் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய விமான கெள்கையை அறிவித்தது. அதன்படி ‘உதான்’ திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க திட்டமிடப்பட்டது. அதில், பயணிகளின் பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்று, விமான நிறுவனங்களுக்கு அளிக்கும் என அறிவிப்பு வெளியிட்டது.

அத்திட்டத்தில் சேர்ந்து, தடைப்பட்டிருந்த விமான சேவையை மீண்டும் தொடக்க புதுச்சேரி மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஐதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, மீண்டும் பெங்களூரூக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சேவையை தொடங்கியது. அதன் பின்னர் பெங்களூரு விமான சேவை நிறுத்தப்பட்டது. கரோனா காலத்தில் விமான சேவைகள் முற்றிலும் இல்லாமல் போனது.

தற்போது புதுவையிலிருந்து விமானத்தை இயக்க 6 விமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந்நிலையில் இச்சேவைகள் எப்போது தொடங்கும் என்று அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, " புதுவையில் இருந்து பெங்களூரு, ஐதரபாத் விமான சேவைக்கு, மத்திய அரசு 3 ஆண்டுக்கு டெண்டர் விட்ட காலம் முடிவடைந்தது. டெண்டர் புதுப்பிக்கப்பட்டு, வரும் 27-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவையை தொடங்க உள்ளோம். முதற்கட்டமாக புதுவையில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கும்.

அடுத்த வாரத்தில் இருந்து இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும். ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. " என்று தெரிவித் தார்.

SCROLL FOR NEXT