சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறி லாரிகளின் வாடகையை டன்னுக்கு ரூ.200 வரை உயர்த்த லாரி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் காய்கறிகளின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச் சாவடி கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்திக்கொள்ளவும், எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச் சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ரூ.45.33 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை தற்போது ரூ.49.09-ஆக உள்ளது. இவ்விரு விலை உயர்வும் பொதுமக்களையே பாதிக்கும் என லாரி உரிமை யாளர்கள் கூறிவருகின்றனர். இந் நிலையில் பொதுமக்களின் அத்தியா வசிய பொருளான காய்கறி களை ஏற்றி வருவதற்கான வாட கையை உயர்த்த லாரி உரிமை யாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
டன்னுக்கு ரூ.200 உயரும்
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் எம்.தாமோதரன் கூறும்போது, “எங்கள் லாரிகள் மூலம் கிருஷ்ணகிரி, வேலூர், குடியாத்தம் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகளை ஏற்றி வருகிறோம். திரும்பிச் செல்லும்போது அந்த நேரத்துக்கு கிடைக்கும் பொருட்களை ஏற்றிச் செல்வோம். எங்கள் லாரிகள் ஒவ்வொரு நாளும் 400 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கின்றன. குறைந்தது 3 சுங்கச் சாவடிகளை இரு முறை கடக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு எங்களுக்கு கூடுதல் செலவுதான். டீசல் விலையும் கடந்த இரு மாதங்களில் 5 முறை உயர்த்தப்பட்டுள்ளன. அதனால் ஒரு டன் காய்கறிக்கு ரூ.200 வரை லாரி வாடகையை உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் கூட்டத்தை கூட்டி விரைவில் முடிவெடுக்கவுள்ளோம்” என்றார்.
கோயம்பேடு தக்காளி வியாபாரி கள் சங்கத் தலைவர் எம்.தியாக ராஜனிடம் இதுபற்றி கேட்டபோது, “மத்திய அரசு கட்டணத்தை உயர்த் தும்போது, லாரி உரிமையாளர்கள் இழப்பை சந்திக்க முடியாது. அத்தொழிலை நம்பி லட்சக்கணக் கான குடும்பங்கள் உள்ளன. அதனால் லாரி உரிமையாளர்களின் முடிவு நியாயமானதுதான். அவர் கள் வாடகையை உயர்த்தும்போது நாங்கள் காய்கறி விலையை உயர்த்த வேண்டியது கட்டாய மாகிறது” என்றார்.