சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய நீதிமன்ற அலுவலக உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து, சேலம் தலைமை நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபீதா உத்தரவிட்டார்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் பொன்பாண்டி (45). நேற்று காலை நீதிமன்றம் வந்த மாஜிஸ்திரேட் பொன்பாண்டியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பிரகாஷை (37) ஊழியர்கள் பிடித்து அஸ்தம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனர்.
மாஜிஸ்திரேட் பொன்பாண்டி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஓமலூர் நீதி மன்றத்தில் பணியாற்றி வந்த பிரகாஷை, சேலம் நீதி மன்றத்துக்கு பணி மாறுதல் செய்தது சம்பந்தமாக மாஜிஸ்திரேட் பொன்பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கத்தியால் குத்தியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
போலீஸாரால் கைது செய்யப்பட்ட பிரகாஷ், ஓமலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய வழக்கில் கைதாகியுள்ள நீதிமன்ற ஊழியர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து, சேலம் தலைமை நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபீதா உத்தரவிட்டுள்ளார்.