புதுச்சேரி: ''பெண்கள் சமைப்பதை குறைத்ததால்தான் ஹோட்டல்கள் அதிகரித்துவிட்டன'' என்று புதுச்சேரி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேசியதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு மையத்தில் பாரம்பரிய உணவு கருத்தரங்கு நடந்தது. ஆய்வு மைய இயக்குனர் பிளாந்தின்ரிபேர்ட் வரவேற்றார். சமூக அறிவியல் துறை டெல்பின் திவே, வெங்கடசுப்பிரமணியன், சுற்றுப்புறவியல் துறை டோரிஸ் பார்போனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கருத்தரங்கில் புதுச்சேரி வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பங்கேற்று பேசும்போது, "முன்பு வீடுகளில் கத்திரி, முருங்கை, வாழை வளர்த்தனர். சிலகாலம் இந்தப் பழக்கம் அறவே நின்றுவிட்டது. இயற்கை முறையில் விளைவிக்கும் பயிர்களை விற்பனை செய்ய புதுச்சேரி கடற்கரை சாலையில் ஒரு விற்பனைக்கூடம் அமைக்க உள்ளோம். பாரம்பரிய விவசாயம் பற்றி அறிய விவசாயிகளை அழைத்துச்சென்று கள ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் விவசாயம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இப்போது அதை சீரமைக்கும் பணியை செய்து வருகிறோம்.
மற்ற நாடுகளை விட பிரெஞ்சு மக்கள் தங்களுக்கு தெரிந்த அறிவார்ந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்கின்றனர். அந்த வகையில் இந்தக் கருத்தரங்கு புதுவை மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். பெண்கள் பாரம்பரிய முறையில் உணவு சமைக்க முன்வர வேண்டும். அம்மியைக்கூட பயன்படுத்துவதில்லை. பெண்கள் சமைப்பதை குறைத்ததால்தான் ஹோட்டல்கள் அதிகரித்துவிட்டன. சரியான காய்கறியை பார்த்து வாங்கக்கூட தற்போது பெண்களுக்கு தெரியவில்லை" என்று குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார்.
அமைச்சர் பேச்சுக்கு பெண்கள் எதிர்ப்பு: அப்போது அங்கிருந்த பெண்கள் அமைச்சர் பேசும்போதே எதிர்ப்புக் குரல் எழுப்பினர். "அமைச்சரின் கருத்து தவறானது. அனைத்து பணிகளிலும் கூடுதலாக பெண்கள்தான் செய்கிறோம். காலத்துக்கு ஏற்ப சமையலறைத் தொடங்கி புதிய சாதனங்கள் வருகிறது. காய்கறிகளை சரியாக இப்போதும் வாங்குவது பெண்கள்தான். ஆண்களும் பணியை பங்கிடாவிட்டால் ஹோட்டல் அதிகரிக்கதான் செய்யும்" என்று தங்கள் கருத்தை முன்வைத்தனர். அமைச்சரும் பதில் கருத்து கூற, அங்கு விவாதம் நடந்தது. அமைச்சர் பேசி முடித்த பிறகு அங்கு நடந்த நிகழ்வுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது, அமைச்சரின் கருத்துக்கு பெண்கள் பதில் கருத்து எடுத்துரைத்ததை தெரிவித்ததற்கு வெளிநாட்டு பெண்கள் கைத்தட்டி வரவேற்றனர்.