மீத்தேன் எரிவாயு திட்டத்துக்காக தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததால், இது தொடர்பான பொது நல வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகியான பி.ஆர்.பாண்டியன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் 667 சதுர கி.மீ. பரப்பில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த இரு மாவட்டங்களிலும் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மீத்தேன் எடுக்கும்போது பெருமளவு நிலத்தடி நீர் வெளியேற்றப்படும். இதனால் விவசாய சாகுபடி கடுமையாக பாதிக்கும். பூமிக்கடியில் இருந்து வெளியேறும் நீரில் சோடியம், மெக்னீசியம் போன்ற ரசாயனங்கள் பெருமளவில் கலந்திருக்கும். அத்தகைய தண்ணீரால் மண் மாசடைந்து, விவசாயமும் பாதிக்கும். இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் சட்டவிரோதமானது. எனவே, இந்தத் திட்டத்தை தொடர தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை செயலர், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறைச் செயலர் ஆகியோர் 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனக்கூறி விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக கிரேட் ஈஸ்டன் எரிசக்தி கழகத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் விதிமுறைகளை மீறியதால் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதமே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் கூறப்பட்டது. மேலும், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான கடிதமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.