அரியலூர்: உக்ரைனில் இருந்து பத்திரமாக வீடு திரும்பிய மருத்துவக் கல்லூரி மாணவியை குடும்பத்தினர் மகிழ்ச்சி பொங்க ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள விசாலாட்சி நகரில் வசிப்பவர் செல்வம் இவரது மகள் கீர்த்தனா(19). இவர் கடந்த டிசம்பர் மாதம் உக்ரைன் நாட்டில் ரூத்ருர் நேஷனல் யூனிவர்சிட்டியில் மருத்துவம் படிக்க சென்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று வருவதையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு தங்கி பயிலும் இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
இதனிடையே, உக்ரைனுக்கு சென்ற தங்களது மகள் பத்திரமாக வர வேண்டும் என்று காத்திருந்த செல்வத்தின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கீர்த்தனா இன்று (மார்ச் 01) காலை பத்திரமாக வீடு திரும்பினார். அவருக்கு ஆரத்தி எடுத்து கட்டித்தழுவி மகிழ்ச்சி பொங்க குடும்பத்தினர் வரவேற்பு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி கீர்த்தனா, ''நாங்கள் இருந்த பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பயின்று வருகிறோம். அங்கு போர் பதற்றம் தெரியவில்லை. ஆனாலும், பாதுகாப்பு கருதி நேற்று புடாபெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து டெல்லி வந்து, இங்கிருந்து சென்னை வந்து வீடு திரும்பியுள்ளேன். என்னுடன், தென்காசி, திருநெல்வேலி பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளும் வந்தனர். எங்களை பெரும் பதற்றம் ஏற்படும் முன்பே மத்திய மாநில அரசுகள் தாயகம் அழைத்து வந்தமைக்கு தனது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.