மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, உக்ரைனில் உள்ளதமிழக மாணவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை தமிழகத்துக்கு அழைத்து வருவது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ‘‘உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விவரங்களை தெரிவித்து, அவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் விரைவில் அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கென தனி அலுவலர் ஒருவரை தமிழகத்துக்கு நியமிக்க வேண்டும்’’ என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றும், விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் முதல்வரிடம் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
அமைச்சர் ஆறுதல்
தமிழக மாணவர்களை மீட்கும்பணிகளை மத்திய அரசு மூலமாகதமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அயலக தமிழர் நலன், மறுவாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு புகார் தெரிவிக்க வந்திருந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களுடன் வீடியோ காலில் பேசி, அவர்களை மீட்க அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருவதாகவும், அச்சமின்றி தைரியமாக இருக்குமாறும் ஆறுதல் கூறினார்.
பின்னர், ‘இந்து தமிழ் திசை’நாளிதழிடம் அவர் கூறியபோது,‘‘உக்ரைனில் சிக்கியிருப்பதாக தமிழகத்தின் 21 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,840 மாணவ, மாணவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் ருமேனியா, போலந்தில் இருந்து வர உள்ள 15 விமானங்களில் இவர்களை அழைத்துவர மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உடன் இருந்தார்.