தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக நேர்மையாக வெற்றி பெறவில்லை: சேலம் ஆர்ப்பாட்டத்தில் பழனிசாமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையான முறையில் திமுகவெற்றி பெறவில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் சேலம் கோட்டை பகுதியில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னையில் கள்ளவாக்குப்பதிவு செய்ய முயன்ற திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்து ஜனநாயக முறைப்படி தனது கடமையை செய்தார். காவல்துறை செய்ய வேண்டிய கடமையை அவர் செய்ததற்காக, அவர் மீது குற்றம்சாட்டி திமுக அரசு சிறையில் அடைத்திருப்பது நியாயமா? நரேஷ்குமார் மீது பல வழக்குகள் உள்ள நிலையில், ரவுடியான அவருக்கு முதல்வர் பாதுகாப்பு கொடுக்கிறார்.

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பிரச்சினையின்றி நடத்த குண்டர்களும், ரவுடிகளும் கைது செய்யப்படுவர்” என டிஜிபி அறிவித்தார். அப்படி நரேஷ்குமார் கைது செய்யப்பட்டிருந்தால் இந்தஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்காது. தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக குண்டர்களையும், ரவுடிகளையும் சென்னை, கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இறக்கி விட்டு, கள்ள வாக்குகளை பதிவுசெய்து, திமுக வெற்றி பெற்றதை மக்கள் அறிவார்கள். நேர்மையான முறையில் திமுக வெல்லவில்லை.

சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி குறிப்பிட்ட வாக்குகளுக்கு மேல் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுக சின்னத்துக்கு வாக்குகள் பதிவாகும் வகையில், மாற்றியமைத்து வெற்றி பெற்றனர் என்பது போன்ற தகவல்களும் எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இது உண்மையான வெற்றி அல்ல; மாயாஜால வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

இதேபோன்று, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் (விழுப்புரம்), செல்லூர் ராஜூ (மதுரை), எஸ்பி.வேலுமணி (கோவை), தங்கமணி (நாமக்கல்) உள்ளிட்டோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசைன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

SCROLL FOR NEXT