கரூர்: கரூர் - கிருஷ்ணராயபுரம் அதிமுக ஒன்றியக்குழு தலைவர் மீது ஒன்றியக்குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. ஒன்றியக் குழு 20 உறுப்பினர்களைக் கொண்டது. தலைவர் பதவி பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. 12 வார்டுகளில் அதிமுக கூட்டணியும், 8 வார்டுகளில் திமுக கூட்டணியும் வெற்றிபெற்ற நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட பட்டியலினப் பெண்கள் யாரும் வெற்றிப் பெறாததால், திமுகவில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சந்திரமதியை அதிமுகவில் சேர்த்து தலைவராகப் வெற்றிப்பெற வைத்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் திமுகவில் இணைந்தனர். இதனால், திமுக பெரும்பான்மை பெற்றதால் கடந்த கூட்டத்தில் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து இன்று (பிப். 28) குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில், தலைவர்மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட 16 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதிமுகவைச் சேர்ந்த 3 பேர் வாக்களிப்பில் பங்கேற்காத நிலையில், தீர்மானத்தை எதிர்த்து தலைவர் சந்திரமதி வாக்களித்தார். நம்பிக்கையில்லாத தீர்மானம் வெற்றி பெற்றதால் தலைவர் பதவியிலிருந்து சந்திரமதி நீக்கப்படுவது உறுதியானது.