தமிழகம்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சத்குருவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

செய்திப்பிரிவு

நம் மனம், உடல் மற்றும் புத்தியை ஒருங்கிணைக்க ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார் என சத்குருவுக்கு அனுப்பிய மஹா சிவராத்திரி வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவுக்கு பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில், “புனிதமான மஹா சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு தாங்கள் செய்துவரும் ஏற்பாடுகளை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழா அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் ஆதாரமாக உள்ளது. ஆதியோகி எங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை நினைவு கூர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.

நம்முடைய மனம், உடல் மற்றும் புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஜீவனில் இருந்து சிவனாக மாறுவதற்கு ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார். இந்த விழா, மனிதகுலம் தனது அறியாமையில் இருந்தும், இருளில் இருந்தும் கடந்து வருவதற்கான பாதையை நமக்கு காட்டட்டும். மனித குலத்தின் மீது தனது ஆசிகளை பொழியுமாறு ஆதியோகியை நான் பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தாண்டு ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் திரைப்பட பின்னணி பாடகர் ஷான் ரோல்டன், தெலுங்கு பாடகி மங்கலி, பக்திப் பாடகர் மாஸ்டர் சலீம், அசாமின் புகழ்பெற்ற பாடகர் பப்பான், ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பாடகர் ஹன்ஸ்ராஜ் ரகுவன்சி ஆகியோர் பாட உள்ளனர். இதுதவிர, ஈஷாவின் சொந்த இசை குழுவான சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவும், ஈஷா சம்ஸ்கிருதி குழுவினரும் தங்கள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அர்ப்பணிக்க உள்ளனர்.

இந்த விழா, கோவை ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ- டியூப் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT