‘‘உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு திரும்ப மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது’’ என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசித் திருவிழா நேற்று தொடங்கியதையொட்டி, அவர் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தார். பின்னர் அங்கு நடைபெற்ற ஹைந்தவ சேவா சங்க சமய மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
கரோனா இன்னும் முற்றிலும் நீங்கவில்லை. கரோனா நீங்கும்வரை அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். இந்தியாவில் 160 கோடி டோஸுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு தடுப்பூசிகளை இந்தியா தயாரித்துள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். மாநில அரசுகளும் தடுப்பூசியை மக்களுக்கு உரிய முறையில் எடுத்துச் செல்கின்றன என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘உக்ரைனில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள தமிழகம், தெலங்கானா, புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களை மீட்க மத்திய அரசு அந்நாட்டு வெளியுறவுத்துறையுடன் தொடர்பில் இருந்து வருகிறது.
உலக நாட்டு அதிபர்களிடம் பிரதமர் மோடிக்கு நல்ல மதிப்பு உண்டு. தமிழக மாணவர்கள் உட்பட அனைவரும் விமானம் மூலம் பத்திரமாக சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.
160 கோடி டோஸுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு தடுப்பூசிகளை தயாரித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும்