ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கோயில்கள் இடிக்கப்படுவதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பேசியது:
தேர்தல்களில் தனித்து போட்டியிடும் துணிச்சல் திமுகவுக்கு எந்த காலத்திலும் இருந்தது இல்லை. எனினும், தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. நல்ல திட்டங்களை செயல்படுத்த திமுகவுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளனர். நாங்களும் வாக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்தான். தற்போது பாஜக தனித்து போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளது.
இந்த மண்ணில் தமிழர்கள், இந்துக்கள் அரசியல் அநாதையாக உள்ளனர். இந்து மக்கள் கட்சி ஹிஜாப்புக்கு எதிரானது அல்ல. நாங்கள் ஹிஜாப்புக்கு ஆதரவாகதான் இருக்கிறோம். நாங்கள் திமுக, அதிமுகவை அழிக்க நினைக்கவில்லை. தமிழகத்தில் நல்ல பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற போர்வையில் கோயில்கள் இடிக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை ஆதரிக்கிறோம். அதற்காக, நீர்நிலைகளில் கோயில்கள் அமைந்துள்ளதாக கூறி, பக்தர்களின் மனம் புண்படும் வகையில் 40 ஆண்டு காலம் பழைய கோயில் களைக்கூட இடிக்கின்றனர்.
முதல்வர் இதில் கவனம் செலுத்தி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, கோயில்களை இடிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளதால், இத்தேர்தலை செல்லாது என்று அறிவித்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். மாணவி தற்கொலை விவகாரத்தில் முதல்வர் மவுனம் சாதிப்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.