உக்ரைனில் சிக்கி இருந்த தமிழக மாணவர்கள் 5 பேர் நேற்று சென்னை வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைன் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அங்கு மருத்துவம் படித்து வரும் தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்கள் அச்சத்துடன் அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் சுரங்கப் பாதைகளில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு உணவு மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக மாணவர்கள் அருகில் உள்ள ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர். அங்கிருந்து இந்திய மாணவர்களை மீட்க இந்திய தூதரம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்தியாவுக்கு தொடர்ந்து மாணவர்கள் விமானம் மூலமாக டெல்லி, மும்பை விமான நிலையங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அங்கிருந்து அவர்களது சொந்த மாநிலங்களுக்கு மாணவர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு டெல்லி வந்தடைந்த 11 கேரள மாணவர்கள், தமிழகத்தை சேர்ந்த 5 மாணவர்கள், அங்கிருந்து நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் பொன்னாடை போர்த்தியும் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
அப்போது தமிழக மாணவர்களான குரோம்பேட்டையைச் சேர்ந்த ஷகீா் அபுபக்கா், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஹரிகர சுதன், அறந்தாங்கியைச் சேர்ந்த செல்வ பிரியா, தேனியைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, சேலத்தைச் சேர்ந்த சாந்தனு பூபாலன் ஆகியோர் தமிழக அரசுக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்களை மிக பாதுகாப்போடு முதலமைச்சரின் முயற்சியில், மத்திய அரசின் ஒத்துழைப்பில் முதற்கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்களை மீட்டு வந்துள்ளோம். மீட்கப்பட்ட 5 மாணவ, மாணவிகளை அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்து உள்ளோம். தமிழக மாணவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் 12 மாணவர்கள் வர இருக்கின்றனர். மும்பைக்கு வந்து அங்கிருந்து சென்னைக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். இங்கிருந்து மாணவர்கள் அவர்களின் வீட்டுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
உக்ரைனில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் உள்ளனர். சுமார் 3,800 பேர் மின்னஞ்சல் வழியாக தகவல் தெரிவித்துள்ளனர். அதில் 1,800 மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய பல்கலைக்கழகங்களுக்கு தெரிவித்து, மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை வந்த மாணவர் ஹரிஹரசுதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "உக்ரைனில் உணவுக்கே மிகவும் சிரமப்பட்டோம். அங்கிருந்து எல்லையை தாண்டும்போது அச்சமாக இருந்தது. ருமேனியா நாட்டு அதிகாரிகள் எங்களை பாதுகாப்பாக இந்தியா அனுப்பி வைத்தனர்" என்றார்.
சேலத்தைச் சேர்ந்த சாந்தனு கூறும்போது, போர் தொடங்கியதும் பல்கலைக்கழக நிர்வாகம் எங்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டது. எங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து ருமேனியா விமானநிலையம் செல்ல 50 கிமீ தூரம். பேருந்து வழியாக ருமேனியா நாட்டு எல்லையை அடைந்தோம். அங்கிருந்து விமான நிலையம் செல்ல பல மணி நேரம் நடந்தே சென்றோம். பின்னர் இந்திய தூதரகம் உதவியால் விமான நிலையம் சென்று, இந்தியா வந்தடைந்தோம்" என்றார்.