மாசி மாதத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள கோலவிழியம்மன் கோயிலில் 1,008 பால்குட விழாவை அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இணைக் கோயிலான கோலவிழியம்மன் கோயிலின் மாசி மாத 1,008 பால்குட விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 8 மணியளவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலிருந்து 1,008 பால் குடங்கள் புறப்பாட்டை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, கோயிலில் இருந்து 1,008 பால் குடங்கள் வீதியுலா புறப்பட்டு கபாலீஸ்வரர் கோயிலின் மாட வீதிகளைச் சுற்றி, கச்சேரி சாலை, அருண்டேல் சாலை, பஜார் சாலை, காரணீஸ்வரர் கோயில் தெரு, வாலீஸ்வரர் கோயில் தெரு, ஜி.என்.செட்டி தெரு வழியாக இறுதியாக கோலவிழியம்மன் கோயில் சென்றடைந்தன. இதையடுத்து கோலவிழியம்மன் உற்சவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோலவிழியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பால்குடம் சுமந்து வந்த பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் த.காவேரி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.