திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 20-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ம் தேதி கருட சேவை உற்சவம் நடைபெற்றது. 23-ம் தேதி சூரிய, சந்திர பிரபை புறப்பாடு, 24-ம்தேதி பல்லக்கு சேவை நடைபெற் றன.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நள்ளிரவு 12 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர். நேரம் ஆக ஆக, பக்தர்கள் கூட்டம்அலைமோதியது. நேற்று அதிகாலை 2.15 மணி முதல் 3.15 மணிக்குள் பார்த்தசாரதி பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார்.
‘கோவிந்தா.. கோவிந்தா’ கோஷம்
காலை 7 மணிக்கு தேரோட்டத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். மாட வீதிகளில் தேர் வலம் வந்தது. வீதிகளின்இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள், ‘‘கோவிந்தா... கோவிந்தா’’ என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். பின்னர் தேர், நிலையை வந்தடைந்தது. இரவு 9 மணி அளவில் தோட்ட திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை 6.30 மணிக்கு வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரமும், இரவு குதிரை வாகன சேவையும் நடக்க உள்ளது. நாளைகாலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடைபெற உள்ளது. மார்ச் 1-ம் தேதி இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.