தமிழகம்

ஜூன் மாதம் திருச்சியில் நடைபெறும் விஎச்பி மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினை அழைக்க முடிவு: அகில இந்திய முன்னாள் செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சியில் வரும் ஜூன் மாதத்தில் விஸ்வ இந்து பரிஷத் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும், அதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைக்க உள்ளதாகவும் விஸ்வ இந்து பரிஷத் அகில இந்திய முன்னாள் செயல்தலைவர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.

தமிழ்நாடு கிராமக் கோயில்கள் பூசாரிகள் பேரவையின் மாநிலபொதுக்குழுக் கூட்டம், அதைத்தொடர்ந்து தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத்(விஎச்பி) பொதுக்குழு கூட்டம் ஆகியவை திருச்சியில் நேற்று நடைபெற்றது. இவற்றில் விஎச்பி அகில இந்திய முன்னாள் செயல்தலைவர் எஸ்.வேதாந்தம், மாநிலத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் எஸ்.வேதாந்தம் கூறியதாவது:

சமய நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமே இந்து கோயில்களின் அறங்காவலர் குழுவில் நியமிக்க வேண்டும். மதமாற்றத் தடைச் சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 200 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிற மத வழிபாட்டுத் தலங்களை இடிக்க அரசு முன்வருவதில்லை. ஆனால் இந்துகோயில்களை மட்டும் குறிவைத்து இடித்து வருவது கண்டிக்கத்தக்கது. இச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும்.

வரும் ஜூன் மாதம் விஸ்வ இந்து பரிஷத் மாநாடு திருச்சியில் நடத்தப்பட உள்ளது. இதில்பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளோம். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி அனைத்து கிராமகோயில் பூசாரிகளுக்கும் மாதஊக்கத்தொகை வழங்க வேண் டும்.

கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ. 1 லட்சமாக உயர்த்த வேண்டும். கோயில் புனிதத்தையும், பூஜைமுறைகளையும் அறிந்த சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்கள், கிராமக் கோயில் பூசாரிகள் போன்றோரையும் தக்கார் குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT