தமிழகம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும்: கே.அண்ணாமலை வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்லடம், சோமனூர், அவிநாசி, புதுப்பாளையம், மங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 5 லட்சம் விசைத்தறிகள் முடங்கி கிடக்கின்றன. இங்கே உழைத்துக் கொண்டிருந்த 2 லட்சம் தொழிலாளர்கள் வாடிக் கிடக்கிறார்கள். கரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட பொருளாதார பின்னடைவில் இருந்து மீண்டு வர முயற்சிக்கும் 3 ஆயிரம் கைத்தறி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் ரூ.200 கோடிக்கான மூலப்பொருட்கள் முடங்கி கிடக்கின்றன. ஜனவரி 9-ம் தேதியில் இருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெறும் வேலைநிறுத்தத்துக்கு காரணம் ஆளும் கட்சியின் மெத்தனப் போக்கு. ஆளும் கட்சியின் தொழிலாளர் விரோதப் போக்கை கூட்டணியில் உள்ளகம்யூனிஸ்டுகளும் கூட கண்டுகொள்ளவில்லை. கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழக அரசு இனியும் காலம் கடத்தாமல், தன் மெத்தன போக்கை கைவிட்டு பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மூடிக்கிடக்கும் விசைத்தறிகளை உடனடியாகஇயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT