கல்வியில் சிறந்த மாநிலம் என்ற பட்டம் போதாது, ‘உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழகம்’ என்ற பட்டத்தைப் பெறவேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் சமூக மேம்பாட்டுக்கான புத்தாக்கத் திட்டம்தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களின் கண்டுபிடிப்புகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும்ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் மிகச் சிறிய கிராமத்தில் பிறந்த கோடக நல்லூர் ராமசாமி சுந்தரராஜனால் 1947-ம் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. கல்வி உரிமை மறுக்கப்பட்டு, பலருக்கும் ஆரம்பக் கல்விகூட கிடைக்காத காலகட்டத்தில், உயர்கல்வி பெற வாய்ப்புக் கிடைத்த சிலருக்கும் பொறியியல் படிப்பு என்பது கனவாகத்தான் இருந்தது. இச்சூழலில்தான் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது.
மாணவர்கள் பொறியியல் படிக்க இடையூறாக இருந்த நுழைவுத் தேர்வை முன்னாள் முதல்வர் கருணாநிதி நீக்கினார். இதனால் தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பொறியாளர் இருக்கின்றனர்.
நீட் தேர்விலிருந்து விலக்கு
அனைத்துப் படிப்புகளும் நமது தமிழக மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நிலைப்பாடாகும். அதனால்தான், ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதற்குத் தடையாக இருக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தி அதிகம். இந்தியாவில் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழகத்தில் உள்ளன. இங்கு இருப்பதுபோல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உலக ஆராய்ச்சி நிறுவனங்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழக இளைஞர்கள் உலகத்தின் அனைத்து நாடுகளிலும் பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தில் ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் இன்னும் அதிகமாக வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் புதுவிதமான படிப்புகள் அனைத்தையும் தமிழகக் கல்வி நிறுவனங்களில் புகுத்தவேண்டும். கல்வியில் சிறந்த தமிழகம் என்ற பட்டம் மட்டும் நமக்கு போதாது. ‘உயர் கல்வி, ஆராய்ச்சிக் கல்வியிலும் சிறந்த தமிழகம்’ பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும். அதை நோக்கி நாம் பயணிப்போம்.
சமூக மேம்பாட்டுக்கான புத்தாக்கம் என்ற திட்டமானது, மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள், நலிவடைந்த பெண்கள் உள்ளிட்டோரின் தேவையைப் பூர்த்தி செய்து, அவர்களது வாழ்வில் உயர்வைக் கொண்டு வரும் நோக்கத்தில் அமைந்துள்ளது.
மாணவர்கள் கல்வி பயிலும்போதே சமுதாய தேவைகளைக் கண்டறிந்து பூர்த்திசெய்ய ஊக்குவிக்க இந்தத் திட்டம் நிச்சயம் உதவும். இந்த திட்டத்தைக் கருணாநிதி பார்த்திருந்தால், அவரும் பாராட்டி, வாழ்த்தியிருப்பார். அவர்தான் நாட்டிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிக்குத் தனி துறையை உருவாக்கி நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது நானும் அதை நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். கண்டுபிடிப்புகள் சிறியதாக இருந்தாலும் அவற்றின் மனிதநேயப் பண்பு பெரியது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி தலைவர் கே.எஸ்.லட்சுமி, செயலாளர் கே.எஸ்.பாயை, இயக்குநர் என்.ஸ்ரீகாந்த், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.