தமிழகம்

காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது: சீமான்

செய்திப்பிரிவு

சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சிவகங்கையில் இன்று தேர்தல் பிரச்சாரம் நடந்தது. அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

''வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது. திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியை அழுக்கு மூட்டை என்று விமர்சித்தார். இப்போது எப்படி கூட்டணி வைத்தார்? இது கூடாத கூட்டணி.

கருணாநிதி கச்சத்தீவை மீட்போம் என்று தேர்தல் வரைவு அறிக்கையில் கூறுகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி கச்சத்தீவைக் கொடுத்த பிறகு மீட்க முடியாது என்று சொல்கிறது. இது பொருந்தாத கூட்டணி.

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளில் திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். நாம் தமிழர் கட்சிக்குதான் வாக்களிப்பார்கள். இதனால் காங்கிரஸ் தோற்கும். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.

நான் கூறுவது அனைத்தும் நடக்கும். மே 19-ம் தேதி அன்று நீங்களும் அதை உணர்வீர்கள்'' என்று சீமான் கூறினார்.

SCROLL FOR NEXT