சென்னை: நாகூர் தர்ஹா நிர்வாகத்தை 4 மாதங்களுக்கு மட்டும் கவனிக்க நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாகக்குழு 4 ஆண்டுகளாக பதவியில் தொடருவது ஏன் என்றும், அந்த நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நாகூர் தர்ஹா நிர்வாகத்தை வக்ஃபு வாரியம் கையி்ல் எடுக்க உத்தரவிட்டுள்ளது.
நாகூர் தர்ஹாவில் நடந்த நிர்வாக முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தர்ஹா நிர்வாகத்தை தற்காலிகமாக 4 மாத காலத்துக்கு கவனிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.எப்.அக்பர் ஆகியோர் அடங்கிய நிர்வாகக் குழுவை அமைத்து கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், நாகூர் தர்ஹாவில் கடந்தஜன.4 முதல் ஜன.17 வரை நடைபெற்ற 465-வதுஉரூஸ் விழாவில் பங்கேற்க அனுமதிஅளிக்கக் கோரி முஹாலி முத்தவல்லி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது கோரிக்கையை பரிசீலிக்க வக்ஃபு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு யாருக்கும் அனுமதி கிடையாது என அந்த கோரிக்கையை வக்ஃபு வாரியம் நிராகரித்தது.
இந்நிலையில் முஹாலி முத்தவல்லியின் கோரிக்கையை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தர்ஹாவின் தற்காலிக நிர்வாகக் குழு சார்பில் கடந்த பிப்.4-ம்தேதி உரூஸ் விழா முடிந்த பிறகுஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆகியோர் அடங்கிய தற்காலிக நிர்வாகக் குழுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் வெறும் 4 மாதங்களுக்கு நியமிக்கப்பட்ட இந்த தற்காலிக நிர்வாகக் குழு 4 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் தொடருவது ஏன் என்றும், இந்த நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக் கூடாது எனவும், கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிக்கும் என்றும், இந்த கேள்விகளுக்கு தற்காலிகநிர்வாகக் குழு வரும் மார்ச் 10-க்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
அதுவரை தர்ஹா நிர்வாகத்தை தற்காலிகநிர்வாகக் குழு கவனிக்கக் கூடாது என்றும், தர்ஹா நிர்வாகத்தை வக்ஃபு வாரியம் கையில் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.