கோவை தெலுங்கு வீதியைச் சேர்ந்தவர் சிவகுமார். அவரது மனைவி செல்வி. சிவகுமார் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள உணவகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகள் அழகுலட்சுமி. உக்ரைனில் 3-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். உக்ரைன்தலைநகர் கீவ் பகுதியில் உள்ள அவர், அங்குள்ள சூழல் குறித்து நேற்று கூறியதாவது:
நேற்று முன்தினம் இரவு முதல்அச்சுறுத்தல் அதிகமாக இருந்தது.நாங்கள் இரவு முழுவதும் உறங்கவில்லை. மாணவர்கள் சிலர் தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிருந்தோம். அங்கு இருப்பது பாதுகாப்பு இல்லை என்பதால் கல்லூரியில் அனுமதி பெற்று தற்போது இங்குள்ள விடுதியில் தங்கியுள்ளோம். இங்கு இந்தியமாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளோம். இங்கு பதுங்கு குழி(அண்டர்கிரவுண்ட் பங்கர்) உள்ளன. அதில் இருந்தால் குண்டுகள் விழுந்தாலும் உயிர் தப்பிவிடலாம். எனவே, தற்போது பாதுகாப்பான இடத்தில் உள்ளோம்.
நேற்று அதிகாலை குண்டுவெடிப்பு சத்தம் ஆறேழு முறை கேட்டது. எங்கள் பகுதியில் அந்த குண்டு வெடிக்கவில்லை. அருகில் உள்ள பகுதியில் வெடித்தது. பெற்றோருடன் தொடர்பில்தான் உள்ளோம். தொலைத்தொடர்பு இதுவரை துண்டிக்கப்படவில்லை. இங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டோம். அவர்கள், எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள். வெளியேறுவதற்கான விமானத்தை தயார் செய்துவிட்டு உங்களை தொடர்புகொள்கிறோம் என்றனர்.
வழக்கமாக ஒருமுறை இந்தியா வர விமான கட்டணமாக ரூ.30 முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவாகும். சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆயிரம் வரை அதிகரித்தது. பின்னர், போர் பதற்றம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அரசு ஒரு வாரத்துக்குள் எங்களை மீட்டு இந்தியா அனுப்பிவைத்தால் பிரச்சினை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் உதவ வேண்டும்
அழகுலட்சுமியின் தந்தை சிவகுமார் கூறும்போது, "உக்ரைனில் இருந்து அழகுலட்சுமி இந்தியா திரும்பிய பிறகு, இங்குள்ள அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்தால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். மறுபடியும் உக்ரைனுக்கு மகளை அனுப்ப மனமில்லை. எங்களுக்கு பதற்றமாகவே உள்ளது. எனது மனைவி வேலைக்கு செல்லாமல் அழுதுகொண்டே இருக்கிறார். தமிழக மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்தடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இரண்டு நாட்களுக்கே உணவு
கோவை காளப்பட்டியை அடுத்த கைகோளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தரணிதரன் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், “மருத்துவ படிப்பு பயில கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனின் மிக்காலேவ் மாநிலத்துக்கு வந்தேன்.
தற்போது இங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எங்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே உள்ளது. எனவே, மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக எங்களை இங்கிருந்து மீட்டு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.