சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் வாங்கும் புத்தகங்களை வெளியூரில் உள்ள உறவினர், நண்பர்களுக்கு அனுப்ப வசதியாக அஞ்சல் துறை சார்பில் தனி அரங்கம் இன்று முதல் செயல்பட உள்ளது.
பபாசி சார்பில் 45-வது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் 800 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. 500-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தார் தங்கள் படைப்பு நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். புத்தகக் காட்சி தினமும் காலை 11 முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. மார்ச் 6-ம் தேதி வரை செயல்படும்.
இந்த புத்தகக் காட்சியில் விற்கப்படும் பிரபல நூல்களை வாங்கி வெளியூர்களில் உள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்ப சென்னையில் வசிப்போர் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில்கொண்டு அஞ்சல் துறை சார்பில் புத்தகக் காட்சி வளாகத்திலேயே தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு புத்தகங்களை பேக்கிங் செய்யும் சேவை, அஞ்சலில் அனுப்பும் சேவை இன்று முதல் வழங்குகிறது.
இது தொடர்பாக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த அரங்கில் சாதாரண அஞ்சல், பார்சல் அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் புத்தகங்களை அனுப்பும் சேவைகள் வழங்கப்படும். பேக்கிங் சேவையும் வழங்கப்படும். விரைவு அஞ்சலில் அனுப்புவதாக இருந்தால் சுமார் 500 கிராம் எடைக்கு உள்ளூராக இருந்தால் ரூ.30, தூரத்துக்கு ஏற்ப 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு மேல் அனுப்ப அதிகபட்சமாக ரூ.90, ஒவ்வொரு கூடுதல் அரை கிலோவுக்கும் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். பார்சல் மூலம் அனுப்ப, 2 கிலோ வரை உள்ளூரில் அனுப்ப ரூ.45, மாநிலத்துக்குள் ரூ.80, அருகில் உள்ள மாநிலங்களுக்கு ரூ.100, இதர மாநிலங்களுக்கு ரூ.115, மாநில தலைநகரங்களுக்கு ரூ.105 கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கிலோவுக்கும் 5 கிலோ வரை ரூ.12 முதல் ரூ.30 வரை வசூலிக்கப்படும். சாதாரண அஞ்சலில் அனுப்பினால், புத்தகம் நகர்வை கண்டறிய முடியாது. பார்சல் மற்றும் விரைவு அஞ்சலில் அனுப்பினால் மட்டுமே அதன் நகர்வை கண்காணிக்க முடியும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.