தமிழகம்

மதுரை விமான நிலையம் விரிவாக்க பணிக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ.201 கோடி நிதி ஒதுக்கீடு: நில உரிமையாளர்கள் இழப்பீட்டு தொகை பெற அழைப்பு

செய்திப்பிரிவு

மதுரை விமான நிலையம் விரிவாக் கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.201 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 116 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நில உரிமை யாளர்கள் இந்த இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்துக்காக 633.17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இதற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் விரி வாக்கப் பணிகள் தடைபட்டு வந்தன. தற்போது தமிழக அரசு அதற்கான இழப்பீட்டு தொகையை ஒதுக்கியுள்ளதால், நில உரிமையாளர்கள் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறிய தாவது: மதுரை மாவட்டம் மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தாலுகாவில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக அயன்பாப்பாகுடி, குசவன்குண்டு, கூடல்செங்குளம், ராமன்குளம், பாப்பானோடை மற்றும் பெருங்குடி ஆகிய கிராமங்களில் 633.17 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நில உரிமையாளர்களிடம் இருந்து கையகம் செய்யப்பட்ட பட்டா நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதற்காக 29 தீர்வாணைகள் பிறப்பிக்கப்பட்டு ரூ.201 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 116 நிதி வரப்பெற்றுள்ளது. இதில் மொத்தமுள்ள 3,069 நில உரிமையாளர்களுக்கு ரூ.155 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரத்து 929 இழப்பீட்டு தொகை மதுரை விமான நிலையம் விரிவாக்க தனி வட்டாட்சியர்களால் வழங்கப் பட்டுள்ளது.

எனவே மதுரை விமானநி லையம் விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களில் இதுவரை இழப்பீடு பெறாதவர்கள் நில உரிமை தொடர்பான சான்றா வணங்களுடன் மதுரை விமான நிலையம் விரிவாக்க தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். மதுரை விமான நிலையம் விரிவாக்கம் தனி வட்டாட்சியர் அலகு-1, அலகு-2, பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகம் என்ற முகவரியில் வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்று தங்கள் நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.

தற்போது இழப்பீட்டு தொகை வழங்கி நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு விட்டதால் இனியாவது மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் உடனடியாக தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT