புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியில் பெரும்பான்மை இடங்களை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், வெற்றி பெற்ற திமுகவினரிடையே, நகராட்சித் தலைவர் பதவிக்கான போட்டி கடுமையாக நிலவுகிறது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நூற்றாண்டு கண்ட பழமையான நகராட்சியான, 42 வார்டுகளைக் கொண்ட புதுக்கோட்டை நகராட்சியில் திமுக 23, மதிமுக 1, காங்கிரஸ் 3 என 27 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக 8 இடங்களிலும், அமமுக 1 இடம் மற்றும் சுயேச்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றுள்ள திமுகவினர், தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளனர்.
வரும் மார்ச் 4-ம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர் பதிவியானது இட ஒதுக்கீடு அடிப்படையில் பெண் தலைவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைவர் பதவியை கைப்பற்றும் நோக்கில் களம் இறங்கியவர்களில் முன்னாள் அரசு கொறடா பெரியண்ணனின் மூத்த மகள் மணிமேகலை, திமுக நகரச் செயலாளர் நைனாமுகமதுவின் மனைவி ஹவ்வாகனி ஆகியோர் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டனர்.
வெற்றி பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்த மொத்தம் 13 உறுப்பினர்களில் வடக்கு மாவட்ட பொருளாளர் செந்தில்குமாரின் மனைவி திலகவதி, நெசவாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் பாலுவின் மனைவி செந்தாமரை, கலை இலக்கிய அணியின் நிர்வாகி சாத்தையாவின் மனைவி வளர்மதி ஆகியோர் தலைவர் பதவிக்கான பட்டியலில் உள்ளதாக தெரிகிறது. இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், தலைமையின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான பரிந்துரை பட்டியலை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசித்து தலைமைக்கு அனுப்புவர். பின்னர், அவர்களில் தலைவர், துணைத் தலைவர் வேட்பாளர்களாக அறிவிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என திமுகவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை இடங்களை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றப்போவது யாரென்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.