தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பேரூராட்சியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற தந்தை, தாய், மகன் ஆகியோர் குடும்பத்தோடு நேற்று திமுகவில் இணைந்தனர். இதன்மூலம் இப்பேரூராட்சியில் திமுகவின் பலம் 11 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக 8 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக 3, பாஜக 2, சுயேச்சைகள் 2, காங்கிரஸ், மதிமுக, அமமுக ஆகியவை தலா ஒரு இடங்களில் வென்றன.
ஒரே குடும்பத்தில் 3 பேர்
அதிமுக சார்பில் 2-வது வார்டில் சண்முகசுந்தரம், 8-வது வார்டில் அவரது மனைவி அருணாச்சல வடிவு, 12-வது வார்டில் இவர்களின் மகன் பிரேம்குமார் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றனர்.
இவர்கள் மூவரும் நேற்று குடும்பத்தோடு, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை சந்தித்து திமுகவில் இணைந்தனர்.
அதிமுக சார்பில் வெற்றிபெற்ற மூவரும் கூண்டோடு திமுகவுக்கு மாறியதால், இப்பேரூராட்சியில் அதிமுகவுக்கு உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், திமுகவின் பலம் 11 ஆக உயர்ந்துள்ளது.