தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் 50 ஆண்டுகளாக மக்களை நல்வழிப்படுத்தவில்லை. மக்களிடையே ஒரு மாற்றத்தை உருவாக்கவே தேமுதிக -மக்கள் நல கூட்டணி உருவாக்கப் பட்டிருக்கிறது திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் மக்கள் நல கூட்டணி சார்பில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். தான் போட்டியிடும் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் 50 ஆண்டுகளாக மக்களை நல்வழிப்படுத்தவில்லை. ஒரு மாற்றத்தை உருவாக்கவே தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி உருவாக்கப்பட்டு களத்தில் நிற்கிறது. இந்த கூட்டணியை தமிழகத்தில் ஆட்சியில் அமர வைக்க மக்களும் விரும்புகின்றனர். தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது இதனை தெரிந்து கொண்டேன்.
அதிமுக வேட்பாளர் அறிமுகப்படுத்தும் கூட்டங்களில் 5 பேர் இறந்துள்ளனர். அதற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது வருந்தத்தக்கது. திமுகவும் அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பல கோடி பணத்தை பதுக்கியுள்ளனர். பணம் பதுக்கிய அதிமுகவினர் இரு இடங்களில் பிடிபட்டுள்ளனர்.
பணப்பட்டுவாடாவைத் தடுக்க 108 ஆம்புலன்ஸ், காவல் துறை வாகனங்களில் தேர்தல் ஆணையம் தீவிர சோதனையிட வேண்டும். அப்போதுதான் நேர்மையான தேர்தல் நடக்கும். காட்டுமன்னார் கோவில் தொகுதி விடுதலைச்சிறுத்தைகளின் கோட்டை. சிதம்பரம் எம்பி தேர்தலில் நிற்கும் போது அதாவது 1999, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் காட்டுமன்னார் கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் தான் நான் அதிக வாக்கு பெற்றுள்ளேன்.
விடுதலைச்சிறுத்தைகள், போட்டியிடும் 25 தொகுதியில் எனக்கு தாய்மடி இந்த காட்டுமன்னார் கோவில். நான் காட்டுமன்னார் கோவில் மக்களை வணங்குவதற்காக இங்கு வந்துள்ளேன் என்றார். மேலும், தான் நாளை (27ம்தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.