தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது: நிர்மலா சீதாராமன் கருத்து

செய்திப்பிரிவு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது என மத்திய தொழில், வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக வேட் பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நேற்று சென்னைக்கு வந்த அவர், மீனம் பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தமிழக மக்கள் யாரை விரும்புகிறார்களே அவர்களை ஆட்சியில் அமர்த்துவார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை இருந்தது. தமிழகத்திலும் அது எதிரொலித்தது.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் என்பது முதல்வரை தேர்வு செய்வதற்கான தேர்தல். எனவே, இந்தத் தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது.

எனது துறை தொடர்பான திட்டங்கள் குறித்து பேச முதல்வர் ஜெயலலிதாவை எளிதில் அணுக முடிந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தமிழகத்துக்கான பல திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ன. தேர்தல் முடிந்ததும் மத்திய அரசின் திட்டங்கள் முழுவீச்சில் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்களது துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து பேச முதல்வர் ஜெயலலிதாவை தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை என மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கப்பல், நெடுஞ்சாலை, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை எளிதில் அணுக முடிந்ததாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சாரம்

சென்னை சைதாப்பேட்டை தொகுதி பாஜக வேட்பாளர் காளிதாஸை ஆதரித்து சைதாப் பேட்டை ஜோன்ஸ் சாலையில் திறந்த ஜீப்பில் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இதனால் பல்வேறு துறைகளில் தமிழகம் பின்தங்கியுள்ளது. எனவே, மக்கள் அதிமுக, திமுகவுக்கு மாற்று வேண்டும் என விரும்புகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. மத்தியில் இருப்பதைப்போல மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருந்தால் தமிழகம் சிறப்பான வளர்ச்சியைப் பெறும். எனவே தேசிய கட்சியான பாஜகவுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT