திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் இன்று தொடங்குகிறார்.
தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடக்கிறது. வரும் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 31 நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் வெளி யீடு, பிரச்சாரம் என மும்முரமாக ஈடு பட்டுள்ளன. 227 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள முதல்வரும், அதிமுக பொதுச் செய லாளருமான ஜெயலலிதா கடந்த 9-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி வரும் 23-ம் தேதி முதல் மே 14-ம் தேதி வரை 14 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
இந்நிலையில், 173 தொகுதிகளுக் கான திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி திரு வாரூரிலும், பொருளாளர் மு.க.ஸ்டா லின் கொளத்தூரிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தனது முதல்கட்ட பிரச்சார சுற்றுப் பயணத்தை இன்று (15-ம் தேதி) மதுரையில் தொடங்குகிறார். ஏப்ரல் 22 வரை 8 நாட்கள் அவர் பிரச்சாரம் செய்கிறார். ஏப்ரல் 16 - திண்டுக்கல், தேனி பொதுக்கூட்டம், 17- திருப்பூர், 18 - கரூர், திருச்சி, குளித்தலை பொதுக்கூட்டம், 19 - பெரம்பலூர், அரியலூர், கடலூர், இரவு குன் னத்தில் பொதுக்கூட்டம், 20, 21 - விழுப்புரம், 22 - காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்வார் என திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் நேற்று முன்தினம் இரவு, தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். பெரவள்ளூர் சதுக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து விவரித்தார்.