திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் நேற்று கொண்டாடினர். வாணியம் பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல, நாட்றாம்பள்ளி அடுத்த தும்பேரி, வடக்குப்பட்டு, அம்பலூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடினர்.
அப்போது, கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘அதிமுக ஆட்சியில் மக்கள் நலன் கருதி கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. குறிப்பாக, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் திமுக ஆட்சியில் தற்போது முடங்கியுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக பொய் யான வாக்குறுதிகளை தெரிவித்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாததால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசும் போது தனக்கு பின்னாலும் அதிமுக 100 ஆண்டுகள் தமிழகத்தில் மக்கள் சேவை ஆற்றும் எனக்கூறினார்.
லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கம் அதிமுக. அதை யாராலும் வெல்ல முடியாது. தர்மத்தை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை போல தமிழகத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். அதற்கான தூரம் வெகு தொலைவில் இல்லை’’ என்றார்.