சேலத்தில் நடந்த முதல்வர் ஜெயலலிதா பொதுக்கூட்டத்துக்கு சென்ற கணவர் மாயமானதாக அவரது மனைவி புகார் செய்துள்ளார்.
சேலம் ஜாகீர் அம்மாப்பாளையம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. இவரது கணவர் நந்தகுமார் (65). இவர் அதிமுக முன்னாள் கிளை செயலாளர். இவர் கடந்த 20-ம் தேதி சேலம், மகுடஞ்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பாப்பாத்தி, சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் நந்தகுமார் (65). எங்களுக்கு கண்ணன், மணிவண்ணன் என்ற இரு மகன்களும், ஆனந்தி என்ற மகளும் உள்ளனர்.
எனது கணவர் கடந்த 20-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சேலத்தில் பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே, எனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.