தமிழகம்

மாநகராட்சி வார்டில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை: தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கவலை

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கடைசி நேரத்தில் அதிமுககூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. பின்னர், அமமுகவுடன் கூட்டணி அமைத்து, 60 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. பின்னர் 9மாவட்டங்களில் நடைபெற்ற ஊரகஉள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டது. ஏற்கனவே கிடைத்த தோல்வியால்,தேமுதிக சார்பில் போட்டியிட கட்சியினர் தயங்கினர். எனினும், தமிழகம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்டஇடங்களில் தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பு மட்டுமே, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாநகராட்களில் ஒரு வார்டில்கூட தேமுதிக வெற்றி பெறவில்லை. நகராட்சிகளில் 12 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 23 இடங்களில் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘பொதுவாக உள்ளாட்சித் தேர்தலை ஆளும் கட்சிக்கு சாதகமாகத்தான் அமைத்துக் கொள்கின்றனர். தேமுதிக தலைவருக்கு உடல்நிலை சரியில்லாததால், முன்புபோல அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. அதேசமயம், திமுக, அதிமுக கட்சிகள் செலவு செய்யும் அளவுக்கு, தேமுதிகவினரிடம் பண பலமும் இல்லை.

தேமுதிகவின் தொடர் தோல்விகட்சி நிர்வாகிகள், தொண்டர்கள மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல மாற்றங்கள் அவசியம். இது தொடர்பாக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளோம்’’ என்றனர்.

விஜயகாந்த் ஆறுதல்

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூட்டணியின்றி, அதிகார பலம், ஆட்சி பலம், பணபலமின்றி, தைரியமாக தேர்தலில் களம் கண்ட தேமுதிக வேட்பாளர்களை பாராட்டுகிறேன். இந்த தேர்தலில் திமுகவை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் கூட்டணியின்றி, தனித் தனியாக போட்டியிட்டதால், வாக்கு கள் அதிகளவில் பிரிவதற்கு கார ணமாக அமைந்தது. மேலும், ஆளும் திமுக அரசு தனது அதிகார பலத்தை பயன்படுத்தி தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கு எனதுவாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதுடன், தோல்வியுற்றவர்கள் எதற்கும் கலங்க வேண்டாம், துவண்டு விட வேண்டாம். நமக்கு என்று ஓர் எதிர்காலம் கட்டாயமாக இருக்கிறது என்ற நம்பிக்கையோடு பயணிப்போம். இந்த தேர்தலை பொறுத்தவரை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக ஏற்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT