சத்தீஸ்கரில் நக்சல்களின் கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர் விஜயராஜின் இறுதிச் சடங்கு இன்று அரசு மரியாதையுடன் சென்னை அருகே அம்பத்தூரில் நடைபெற உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டே வாடா மாவட்டம் மேளவாடா கிராமத்தில் உள்ள பசாரஸ்- குவாகொண்டா பகுதி வழியாக நேற்று முன்தினம் சிஆர்பிஎப் வாகனத்தில் 7 வீரர்கள் சென்றனர். அப்போது, சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்ததில் 7 வீரர்களும் உயிரிழந்தனர்.
இதில், சென்னை அருகே உள்ள அம்பத்தூரைச் சேர்ந்த விஜய ராஜ்(45) என்ற வீரரும் உயிரிழந் தார். 25 ஆண்டுகளாக மத்திய ரிசர்வ் படையில் பணிபுரிந்த வந்த இவர், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஜார்கண்ட் மாநிலங்களிலும் பணி புரிந்துள்ளார். 1991-ம் ஆண்டு சென் னையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபி ளாக தனது பணியை தொடங்கி யவர். கடந்த 28-ம் தேதி உதவி சப்-இன்ஸ்பெக்டராக (ஏ.எஸ்.ஐ.) பதவி உயர்வு பெற்ற 3- வது நாளில் கண்ணி வெடி தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு தாய் மோகனா பாக்யவதி, மனைவி சர்மிளா, 10-ம் வகுப்பு படிக்கும் விஷா என்ற மகளும் உள்ளனர். 3 சகோதரர்கள், 5 சகோதரிகளைக் கொண்ட விஜயராஜின் குடும்பமே, அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு சோகத்தில் மூழ்கியுள்ளது. உறவினர்களும் நண்பர்களும் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சத்தீஸ்கரில் இருந்து ஹெலி காப்டர் மற்றும் விமானம் மூலம் விஜயராஜின் உடல் சென்னைக்கு வந்தடைந்தது. நேற்று மாலை சென்னை விமானம் நிலையத்தை வந்தடைந்த விஜயராஜின் உடலை மத்திய ரிசர்வ் படையின் உயர திகாரிகள் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அம்பத் தூரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மத்திய ரிசர்வ் படை யினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என மத்திய ரிசர்வ் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், சிஆர்பிஎப் வீரர் விஜயராஜின் குடும்பத்தின ருக்கு தமிழக முதல்வர் ஜெய லலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.