நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்களும் பெண்களும் தான் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பத்தில் தேர்தல் விளக்க பிரச்சாரக் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் இரவு பேசும்போது, ‘‘நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவது இளைஞர்கள் மற்றும் பெண்கள்தான்.
மது இல்லாத தமிழ்நாட்டை பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது ஒழிப்புத்தான் என்று அன்புமணி கூறிவருகிறார்.
இந்தியாவில் விதவைகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். பாமக ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி, வேலைவாய்ப்பு, உயரிய சிகிச்சை, நவீன வேளாண்மை என பல நல்ல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.
தமிழ்நாட்டில் இன்று மக்களால் பேசப்படும் கட்சியாக பாமக உள்ளது. நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்று அதிமுகவும் திமுகவும் நினைக்கின்றனர்’’ என்றார்.