விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே கூவாகம் கிராமத் தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா நாளை (ஏப்.19) நடக்கிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே, சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் கூவாகம் கூத் தாண்டவர் கோயிலுக்கு வருவது வழக்கம்.
நாளை அதிகாலையில் அரவாண் சிரசு எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து தேரோட்டமும் நடக் கிறது. திருநங்கைகள் மணமகள் போல அலங்காரித்து தாலி கட்டிக் கொள்வார்கள். இந்த திருவிழா வில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் விழுப்புரம் நகருக்கு வரத் தொடங்கி யுள்ளனர்.
அவர்கள் விழுப்புரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியிருந்து திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு தங்கும் விடுதிகளில் ரூ.2 ஆயிரமாக இருந்த ஒரு நாள் வாடகை, இந்த ஆண்டு ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு மற்றும் விடுதி உரிமையாளர்கள் விடுத்துள்ள சில விதிமுறைகளுக்கு அச்சப்பட்டு திருநங்கைகள் தங்கும் விடுதி களுக்கு வருவது குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் திருவிழா நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே திருநங்கைகள் ஆயிரக்கணக்கில் விழுப்புரத்தில் கூடுவார்கள். ஆனால் தற்போது திருநங்கைகளின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் காலியாகவே உள்ளன.