மதுரை: சிவகங்கை மாவட்டம் அழகமாநகரியில், வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிவகங்கை அழகமாநகரியைச் சேர்ந்த சிரஞ்சீவி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: அழகமாநகரியில் மாசி மாதம் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படும். இதில் குறைந்தளவு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மாடுபிடி வீரர்களும் குறைந்தளவே அனுமதிக்கப்படுவர். விதிமுறைகளை பின்பற்றி மஞ்சுவிரட்டு நடத்தப்படும்.
இந்தாண்டு பிப்.26-ல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்டு பிப்.9-ல் போலீஸாரிடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. உரிய வழிகாட்டுதல்களுடன் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, பிப். 26-ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வடமாடு மஞ்சுவிரட்டுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.