மதுரை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மொத்தமாக தமிழகம் முழுவதும் 3 மாநகராட்சி, 33 நகராட்சி, 66 பேரூராட்சிகளின் 102 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ஏராளமான வார்டுகளில் அதிமுகவின் தோல்விக்கு இக்கட்சி காரணமாகியிருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சி பெற்றாதது நிர்வாகிகளிடையே சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை களம் இறக்கியது. ஆனால், அக்கட்சி தலைவர் டிடிவி.தினகரன், கடந்த காலங்களை போல் வேட்பாளர்களை ஆதரித்து பெரியளவிற்கு பிரச்சாரத்திற்கு வரவில்லை. ஆனாலும், அக்கட்சி தமிழகம் முழுவதும் ஒரளவு வாக்கு வங்கியை பெற்றிருக்கிறது.
சென்னை மாநகாட்சியில் ஒரு வார்டிலும், தஞ்சை மாநகாட்சியி்ல ஒரு வார்டிலும், திருச்சி மாநகராட்சியில் ஒரு வார்டிலும் வெற்றிப்பெற்றிருக்கிறது. அதேபோல், நகராட்சிகளை பொறுத்தவரையில் சிவகங்கை, தேவக்கோட்டை, முசிறி, மன்னார் குடி, கோவில்பட்டி, தேனி அல்லி நகரம், பெரிய குளம், புதுக்கோட்டை, உசிலம்பட்டி, மேலூர், சோளிங்கர், அரக்கோணம், சாத்தூர், விருதுநகர் ஆகிய நகராட்சிகளில் 33 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
பேரூராட்சிகளை பொறுத்தவரையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி, கன்னியாகுமரி மாவட்டம் கமாரபுரம், தூத்துக்குடி ஏரல் பேரூராட்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 66 பேரூராட்சி வார்டுகளை கைப்பற்றியிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை சேர்த்து 102 வார்டுகளை பெற்றிருக்கிறது. மேலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அமமுக பெற்றுள்ள வாக்கு வங்கி பல வார்டுகளில் அதிமுக வெற்றியை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், எதிர்பார்த்த வெற்றியை அமமுக பதிவு செய்யாததால் அக்கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்துள்ளனர்.