புதுச்சேரி: "பெருந்தொற்றுக் காலத்தில் நம்முடைய கல்வி முறையிலும், செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச தரத்திலான வசதிகளுடன் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் சுமார் ரூ.1.42 கோடி செலவில் புதிதாகக் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா இன்று (பிப்.23) நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு உள் விளையாட்டு அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை கூறியது: "உள்விளையாட்டு அரங்கத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை வைத்ததற்காக துணை வேந்தரை பாராட்டுகிறேன். ஓர் இளைஞராக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் அதில் பங்கு கொள்ளச் செய்தவர் சுபாஷ் சந்திர போஸ். அந்த பெயர் ஒன்றே பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும்.
சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை தொடங்கியபோது ஜப்பான், பர்மா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து போர் வீரர்களை படையில் சேர்த்து மன உறுதியோடு இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸையும், அவரது விடுதலை உணர்வையும் கவுரவிக்கும் வகையில் பிரதமர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவருக்கு சிலையை நிறுவினார்.
இந்த உள்விளையாட்டு அரங்கம் மாணவர்களையும், பேராசிரியர்களையும் ஊக்கப்படுத்தும். இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் பங்கு பெறும் வகையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
அண்மைக் காலமாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இந்த நிலை சில ஆண்டுகளுக்கு முன்புவரை வேறு விதமாக இருந்தது. தற்போது, பிரதமர், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், பல்கலைகழக துணைவேந்தர்கள் போன்றவர்களின் முயற்சியால் குழந்தைகளும், இளைஞர்களும் ஊக்குவிக்கப்பட்டு பதக்கங்கள் வென்று வருகிறார்கள்.
மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டுகளிலும் ஆர்வத்தோடு கலந்துகொள்ள இதுபோன்ற விளையாட்டு அரங்கங்கள் ஊக்கப்படுத்தும். அதுவே இன்றைய காலக் கட்டத்தின் தேவை. கரோனா காலக் கட்டத்தில் உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் நாம் வளர்த்துக்கொள்ள இது உதவும்.
பெருந்தொற்றுக் காலத்தில் நம்முடைய கல்வி முறையிலும், செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மகாகவி பாரதி கூறியதுபோல காலை படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டுகளில் ஈடுபடவும் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்ல முடியும். உடல் வலிமையும் மன வலிமையும் அவர்கள் மேம்படுத்திக்கொள்ள முடியும்” என்றார் ஆளுநர் தமிழிசை.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங், பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி பெறும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.