சென்னை: 2019-ல் நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என உத்தரவிட்டு, 4 வாரங்களில் பதிவான வாக்குகளை எண்ண தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்புள்ளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்தது.
இதனிடையே, நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணையில் பதவிக் காலம் முடிவடைந்த நிர்வாகிகள் வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதுடன், வழக்கு மீதான விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இரு நீதிபதி அமர்வு, 2019 ஜூன் 23 ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ண வேண்டும் என தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
இதனிடையே, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்ல இருப்பதால் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைக்க வேண்டுமென கோரி நடிகர்கள் ஏழுமலை, பெஞ்சமின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீடு செல்ல ஏதுவாக, வாக்கு எண்ணிக்கை முடிவுகளை மூன்று வாரங்களுக்கு அறிவிக்கக்கூடாது என தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.