அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கோவை முக்கியமானதாகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலும், கோவை மாவட்டத் தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளி லும் அதிமுக வேட்பாளர்கள் வென்றிருந்தனர். மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும், கோவையில் திமுகவின் சார்பில், ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாதது அக்கட்சித் தலைமைக்கு நெருடலாக இருந்தது.
இச்சூழலில், கோவையில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், வழக்கம் போல அதிமுக வெல்லும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் அவர்களது எதிர்பார்ப்பை நொறுக்கியது. எளிதாக வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பலரும் திமுகவிடம் தோல்வியை தழுவினர்.
இவ்வெற்றிக்கு காரணம் குறித்து திமுக பிரமுகர்கள் கூறும்போது, ‘‘கோவையில் திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, தமிழக முதல்வரின் கடந்த 9 மாத ஆட்சிக்கு மக்கள் அளித்த பரிசாகும்.
இது எளிதாக கிடைத்த வெற்றியல்ல. சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றாலும், திமுக தலைமையிலான தமிழக அரசு கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. கோவையில் அரசு வளர்ச்சித் திட்டங்கள் செவ்வனே நடக்க, பொறுப்பு அமைச்சராக வி.செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார்.
தவிர, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுகவுக்கும் அவர் பொறுப்பாளரானார்.
சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு பின்னர், தமிழக முதல்வர் அடிக்கடி கோவைக்கு வந்தார்.
கோவையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் கவச உடையணிந்து, கரோனா நோயாளிகளை சந்தித்தது மக்களிடம் வரவேற்பை பெற்றது.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தொழில் முதலீட்டாளர் மாநாடு போன்ற காரணங்களுக்காக முதல்வர் கோவைக்கு வந்து சென்றார். இதுவும் வரவேற்பை பெற்றது. பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட வி.செந்தில்பாலாஜி, திமுக அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடையவும், திமுகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில், 150 இடங்களில் குறைதீர்ப்பு முகாம் நடத்தி, மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கைக்கு அனுப்பியது மக்களின் கவனத்தை ஈர்த்தது. வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தினார். மறுபுறம் திமுக நிர்வாகிகளின் கூட்டத்தை அடிக்கடி நடத்தி கட்சியினரிடம் சோர்வை அகற்றி, வெற்றி பெறுவதற்கான ஊக்கத்தை அளித்து வழிமுறைகளை அறிவுறுத்தினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும், திமுகவினர் அதிக இடங்களில் போட்டியிட வழிவகை ஏற்படுத்தினார். வேட்பாளர்களை களத்தில் முடுக்கிவிட்டு, பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி, 9 மாத இடைவெளியில் கோவையில் மக்களின் வாக்குகளை திமுகவுக்கு ஆதரவாக அறுவடை செய்துள்ளார்.
அதேசமயம், வாக்காளர் களுக்கு பணம், பரிசுப் பொருள் விநியோகம் போன்றவை குறித்து எதிர்க்கட்சியினர் கூறுவது தவறானதாகும்,’’ என்றார்.
எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘திமுகவினர் பணம், பரிசுப் பொருள் விநியோ கிக்கின்றனர் என அதிமுக எம்.எல்.ஏக்கள் பலமுறை தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பணம், பரிசுப் பொருள் மூலம் பெறப்பட்ட வெற்றி நீடிக்காது,’’ என்றனர்.