தமிழகம்

கோவை: போட்டியிட்ட 99 இடங்களில் 3-ல் மட்டுமே வெற்றி; 10 ஆண்டுகளுக்குப் பின் கடும் சரிவை சந்தித்த அதிமுக : 15 வார்டுகளில் டெபாசிட்டை இழந்தது

செய்திப்பிரிவு

கோவை மாநகராட்சியில் வெறும் 3 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்று, கடும் சரிவை அதிமுக சந்தித்துள்ளது. 15 வார்டுகளில் டெபாசிட்டை இழந்ததுடன், 10 வார்டுகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு 2011-ம் ஆண்டு நடைபெற்ற நேரடி மேயர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த செ.ம.வேலுசாமி 45.22 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவைச் சேர்ந்த நா.கார்த்திக் 24.69 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். மொத்தமுள்ள 100 வார்டுகளில் அதிமுக 78, திமுக 10, சுயேச்சைகள் 4, காங்கிரஸ் 3, பாஜக 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களில் வெற்றிபெற்றிருந்தன.

அதேபோல, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் உள்ள 10 இடங்களையும் அதிமுக கைப்பற்றியது. 2016 தேர்தலில் சிங்காநல்லூர் தவிர்த்து மற்ற 9 இடங்களிலும், 2021 தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தெற்கு தொகுதி தவிர்த்த மற்ற 9 இடங்களையும் அதிமுக கைப்பற்றியது.

இவ்வாறு கடந்த 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக கோவையில் ஆதிக்கம் செலுத்திவந்த அதிமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் 99 இடங்களில் நேரடியாக போட்டியிட்ட அதிமுக 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

மாநகராட்சியின் 2, 10, 11, 16, 17, 22, 25, 46, 54, 55, 57, 59, 84, 86, 95 ஆகிய வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர். மேலும், 2, 10, 11, 14, 54, 59, 67,82, 84, 95 ஆகிய வார்டுகளில் அதிமுகவுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. 17, 86-வது வார்டுகளில் அதிமுக நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT